இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
61
லால்குடி கோபாலகிருஷ்ணன்
பொதுவாக ஒரு ஜாதகத்தில் யோகாதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதியை லக்னத்தைக் கொண்டும், ராசியைக் கொண்டும் கணக்கிடுகி றோம். அதுபோல ஒவ்வொரு பாவத்திற்குமான யோகாதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதிகளை யறிந்து செயலாற்றினால், உறுதியான வெற்றியைப் பெறலாம். உதாரணத்திற்கு, கடக லக்னத்திற்கு யோகாதிபதியாகிய செவ்வாய், அதற்கு ஏழாம் பாவமும் களத்திர ஸ்தானமுமாகிய மகரத்திற்கு மாரகனும், பாதக ஸ்தானாதிபதியுமாகிறார்.
அதனால் கடக லக்னக்காரர்கள், செவ்வாய் புக்தியில் திருமணத்தைத் தவிர்ப்பது நல்லது.
அதேபோல கடக லக்னத்திற்கு நான்காம் பாவ மாகிய துலா ராசிக்கு யோகாதிபதியாகிய சனியின் புக்தியில் வீடு, வாகனங்களை வாங்குவது சிறந்த பலனைத் தரும். அந்தந்த பாவ காரகங்களுக்கேற்ப யோகாதிபதிகளையும் பாதகாதிபதிகளையும் அறிந்து செயலாற்றினால் நன்மையடைலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""ஏகாம்பரேசுவரரே! உலகில் பொருளியல் வாதிகள் அநேக சாத்திரங்களைக் கற்றுணர்ந்தாலும், அனைத்திற்கும் அடிப்படையான ஆத்ம ஞானத்தை அறிய மறுப்பதேன்?'' என அன்னை மங்கைநாயகி அகத்தியான்பள்ளி எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு அகத்தீசுவரரைப் பணிந்து கேட்டாள்.
கைலாசநாதர் உரைத்தது- ""இயற்கையின் அழகை ஆதவன் ஒளியில் அனைவராலும் காணமுடியுமென்றாலும், கண்ணைத் திறந்து காணாதவருக்கு காரிருளே காட்சியாம். எதை அறிந்தால் அனைத்தை யும் அறிந்ததாகுமோ, அதுவே பூரண ஞானமாகிய ஆத்ம ஞானம். ஆயிரம் ஜோதி விருட்சங்கள் (ஒளிரும் மரங்கள்) ஒன்றுசேர்ந்தாலும், கானகத்தின் காரிருளை நீக்க முடியாது. "தான் யார்' என்ற கேள்வியிலேயே ஞான வேள்வி பிறக்கிறது. மாயை விலகும் வரை ஏகமும் அநேகமாய்த் தோன்றும். வெட்டவெளியில் ஞானத்தைத் தேடி அலைபவர் காணாமல் போவார். வெட்டவெளியே ஞானம் என்பதை உணர்ந்தவரே உய்வு பெறுவார்.''
""ஆலமர்ச்செல் வரே! "பார்ஸ்வ நிகுட் டனம்' எனும் தாண்ட வத்தின் லயமாகிய உத்திர நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், கேட்டை முதல் பாதத்தில் குருவும், அவிட்டம் முதல் பாதத்தில் சூரியனும், சதயம் முதல் பாதத்தில் புதனும், பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், உத்திரட்டாதி நான் காம் பாதத்தில் சனியும், அஸ்வினி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், மகம் இரண்டாம் பாதத்தில் சந்திரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்றுபர்வதமலை திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீமல்லி கார்ஜுனரை அன்னை பிரம்மராம்பிகை வினவினாள்.
சொக்கன் உரைத்தது- ""காந்திமதியே! இந்த ஜாதகன் முற்பிறவியில் ஹர்ஷவர்த் தனன் எனும் பெயருடன், துவாரசமுத்திரமெனும் ஊரில் வாழ்ந்து வந்தான். இளம்வயதில் கல்வியில் கவனம் செலுத்தாது, தீயவர்களின் சேர்க்கையால் குணம் கெட்டான். ஊராரை மிரட்டிப் பணம் பறித்தும், வழிப்பறிக் கொள்ளை செய்தும் வயிறு வளர்த்தான். அறிவில் முதியோர் சொன்ன புத்திமதியும் விழலுக்கு இறைத்த நீரானது. காவலதி காரிகளால் சிறைதண்டனைப் பெற்றான்.
சிறையில் மாண்டான். உடலென்னும் சிறையிலிருந்து உயிர்ப்பறவை விடுதலையாகி, நரகச்சிறையில் அடைக்கப் பட்டது. "அந்தகூபம்' எனும் நரகத்தில் நெடுநாள் வருந்திய பின், பூவுலகம் மீண்டான். வையாபுரி எனும் ஊரில் ஒரு வைசியக் குடும்பத்தில் பிறந்தான். இளம்வயதில் ஏற்பட்ட நோயால் மூளை பாதிக்கப்பட்டு "மிகை அச்சம்' எனும் துன்பத்தை அனுப வித்து வருகிறான். முன்ஜென் மத்தில், ஊராரை அச்சுறுத்தி வாழ்ந்ததால், இப்பிறவியில் எதைக்கண்டாலும் அச்சமுற்று வாழ்கிறான். பெரியோரின் உபதேசத்தையேற்று * வால்மீகிபோல் திருந்தியிருந்தால், இந்த துன்பம் அவனை அணுகியிருக்காது. பெரும் செல்வச்செழிப்புள்ள வாழ்க்கை அமைந்தாலும், மனம் பேதலித்து அமை தியின்றி காலங்கழிக்கிறான். இதற்குப் பரிகாரமாக, கூண்டில் அடைபட்டு அச்சத் துடன் வாழும் பறவைகளை வாங்கி, அவற் றுக்கு விடுதலை தந்தால் சுகம் பெறுவான்.''
* வால்மீகி- ஒரு வழிப்பறிக் கொள்ளை யனாக இருந்தவர். நாரதரின் உபதேசத்தால் மனம் திருந்தி, தன்னை உணர்ந்து, உலகம் போற்றும் "ராம காவிய'த்தைப் படைத்தார்.
(வளரும்)
செல்: 63819 58636
_____________
நாடி ரகசியம்
1. உத்திர நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், உத்திரட்டாதி நான்காம் பாதத்தில் லக்னமும் அமையும் ஜாதக அமைப்பைப் பெற்றவர் ரண சிகிச்சை நிபுணராவார்.
2. உத்திர நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சனியும், உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் லக்னமும், ரோகிணி மூன்றாம் பாதத்தில் சந்திரனும் அமர்ந்தால், ஜாதகி பேரழகியாக இருப்பாள்.
3. உத்திர நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சூரியனும், உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் லக்னமும் அமையும் ஜாதக அமைப்பைப் பெற்ற ஜாதகி, பிடிவாத குணத்தால் இல்வாழ்க்கையை இழப்பாள்.
கேள்வி: கந்தர்வ நாடி எந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது? உலகிலுள்ள அனைவரின் விதியையும் இதில் காண முடியுமா?
பதில்: கந்தர்வ நாடி "கடபயாதி ஸங்க்யை' மற்றும் "பூதசங்க்யா' போன்ற சங்கேதக் கணித முறைகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் எண்கள், எழுத்துகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, குண என்ற சொல் மூன்றையும், வேத என்பது நான்கையும், நவ நிகர்வம் என்பது தொண்ணூராயிரம் கோடியையும் குறிக்கும். கணிதப் பயன்பாட்டில் பூஜ்ஜியம்முதல் ஒன்பதுவரையுள்ள எண்களைக்கொண்டே, எண்ணிலடங்கா இலக்கங்களையுடைய பெரிய எண்களை வடிவமைக்க முடியும். அதுபோல, கந்தர்வ நாடியில் தொண்ணூற்றாறு தத்துவங்களின் அடிப்படையில் கணித சூத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு அணுவின் உள்ளமைப்பும், பிரபஞ்சத்தின் கட்டமைப்பும் ஒன்றே. அதுபோல, நாடி சாஸ்திரத்தில் காணப்படும் கணிதப்புள்ளிகளே ஜாதகரின் விரிந்த வாழ்க்கையாகத் தெரிகிறது. ஜனன காலம், தேசத்தைக் கொண்டு ஒரு ஜாதகரின் இயற்கையான இசைவைக் (natural rhythm) கண்டறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.